Skip to content

குழு சிகிச்சை முன்னோடித் திட்டம்

நீங்கள் சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டு, தற்பொழுது தமிழ் சமூகத்தில் வயது வந்த ஒருவராக இருந்தால், A.N.B.U. வின் குழு சிகிச்சை முன்னோடித்திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கின்றோம். மொழியியல் மற்றும் கலாச்சார உணர்வுகளுக்குப் பொருந்தும் வகையில் தமிழ் சிகிச்சை திட்டங்களை உருவாக்கி, தேற்றுதலுக்குத் தேவையான வளங்களையும் இடத்தையும் வழங்குவதே இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும்.

2024 ம் ஆண்டு நடைபெறவிருக்கும் எமது அடுத்த கட்ட குழு சிகிச்சை பற்றிய அறிவித்தல்.

ஏப்ரல் 9 முதல் ஜுன் 11 2024 வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலைகளிலும் நடைபெற இருக்கும் 10 குழு சிகிச்சை அமர்வுகளில் பங்கேற்கலாம்.

திகதிகள்: ஏப்ரில் 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28, ஜுன் 4, மற்றும் 11.

நேரம்:மாலை 6-9

இவ்வமர்வுகள் டொரோண்டோவின் நோத் யோர்க் பிராந்தியத்தில் நடைபெற உள்ளது. இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

நீங்கள் பங்கேற்பதற்கு முன்னர் உங்களை இந்தத் திட்டத்தில் பங்கேற்பவராக ஏற்றுக்கொள்வதற்குச் செய்ய வேண்டிய நடைமுறைகளை A.N.B.U. பின்பற்றும்.

சிறார் பாலின துஷ்பிரயோகம் என்றால் என்ன?

சிறார் பாலியல் துஷ்பிரயோகம் என்பது, பாலியல் விவரங்களை உள்ளடக்கிய ஊடகப் பொருட்கள், தொடர்புகள், செயற்பாடுகள், நடத்தை போன்ற பல பொருத்தமற்ற விடயங்களை ஒரு சிறாருக்குக் காட்டுதல் அல்லது ஈடுபடுத்துதல் என்று வரைவிலக்கணப் படுத்தப்பட்டுள்ளது. ஒரு நபருடைய கலாசாரம், இனம், பாலினம், பிற அடையாளங்கள் எவ்வாறிருப்பினும் அவர் சிறுவயதில் பாலின துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டிருக்கலாம். துஷ்பிரயோகம் பற்றிய விடயங்களைப் பற்றிப் பேசுவதில் ஒரு தயக்கமும், துஷ்பிரயோகத்தின் விளைவாக தலைமுறைகளுக்கிடையே தொடர்ந்து வரக்கூடிய எதிர்மறை
விளைவுகளும் ஏனைய சமூகங்களைப் போலவே எமது சமூகத்தின் மத்தியிலும் பரவலாக உள்ளது

A.N.B.U. குழு- சிகிச்சை முன்னோடித் திட்டம் என்றால் என்ன?

The Gatehouse, மற்றும் York University - Centre for Sexual Violence Response, Support and Education ஆகியவற்றுடன் இணைந்து முதன்முறையாக ஒரு குழு சிகிச்சை மாதிரி ஆராய்ச்சித் திட்டத்தை, A.N.B.U. நடத்தி வருகின்றது. இந்த மாதிரியானது, தமிழ் சமூகத்தில் சிறுவயதில் பாலின துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களைத் தேற்றுவதை ஆரம்பிப்பதற்காக, அவர்களது கலாசாரம் மற்றும் மொழியியல் ரீதியில் பொருத்தமான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆய்வு எவ்வாறு நடைபெறுகிறது?

அடுத்த 2 ஆண்டுகளில் A.N.B.U. புலம்பெயர்ந்த தமிழர்களுக்குள் CSAயால் பாதிக்கப்பட்டவர்களுகு மூன்று கட்ட குழு சிகிச்சை மற்றும் தனிப்பட்ட சிகிச்சை அமர்வுகளை (தேவைக்கேற்ப) நடத்தும். ஒவ்வொரு கட்டத்திலும் பங்கேற்கும் குழு புதியதாக இருக்கும். நிபுணத்துவம் வாய்ந்த ஒரு மதிப்பீட்டாளரின் வழிகாட்டுதலுடன், இந்த ஆராய்ச்சித் திட்டம் மேம்பாடுகளைக் கண்காணித்து, ஒருங்கிணைத்து, மாற்றங்களைச் செய்து, இறுதியில் தமிழ் புலம்பெயர்ந்தோரில் தேவைகளைப் பிரதிபலிக்கத்தக்க சேவைகளைச் செய்யும் குழு சிகிச்சை மாதிரியை உருவாக்கும்.

இதில் யார் பங்கேற்கலாம்?

  • தம்மைத் தமிழராக அடையாளம் காண்பவராகவும்,
  • 18 வயதிற்கு மேற்பட்டவராகவும்,
  • சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவராக அல்லது தனது சமூகத்தில் நடந்த அத்தகைய நிகழ்வினால் பாதிக்கப்பட்டவராகவும் இருந்தால் இந்த ஆய்வில் பங்கேற்பதற்கு வரவேற்கப்படுவார்கள்.

இதில் பங்குபற்றுவதற்கான தகுதிகள் பற்றி அறிய விரும்பினால் wageproject@anbu.ca இற்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

இவ்வாராய்ச்சித் திட்டத்தில் பங்குபற்றுவோர் எத்தகைய சேவைகளை பெறுவார்கள்?

ஒவ்வொரு கட்டமும் சுமார் 8 வாரகாலத்திற்குள், 1-2 குழுசிகிச்சை/அல்லது தனி சிகிச்சை சேவைகளை உள்ளடக்கும். இந்த அமர்வுகள் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட சமூக சேவகர் அல்லது பதிவுசெய்யப்பட்ட மனநல சிகிச்சையாளரின் வழிகாட்டலில் நடைபெறும். இந்த திட்டம் தமிழ் மக்களால் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் சிறார் பாலின துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ரடோருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு குழு சிகிச்சை அமர்விலும், மற்றும் தனிப்பட்ட சிகிச்சை அமர்விலும், பங்குபெறுவர்கள் பின்வரும் அம்சங்களினால் பயனடைவார்கள் என்பதே எமது நம்பிக்கை:

  • கலாசாரரீதியில் சிறார் பாலின துஷ்பிரயோகம் தொடர்பான கலாசார ரீதியான அறிவை வளர்த்துக்கொள்ளத் தயக்கமின்றி அணுகக்கூடிய ஒரு இடத்தை அடைதல்.
  • தமது அனுபவங்கள்ளைக் கண்டறியக் கூடிய கருவிகளைக் கண்டுபிடிப்பதன் மூலம், தேற்றுதல் நடைமுறைகளை ஆரம்பித்தல்.
  • சிறார் பாலின துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட ஏனையோருடன் பழகுதல், மற்றும் தாமும் சமூகம் என்ற உண்ர்வைப் பெறுதல்.

A.N.B.U.வின் குழு சிகிச்சை மாதிரி, பெரியதோர் இலக்கை அடைவதற்கான முதல் அறிகுறி.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் சமூகத்திற்காக உருவாக்கப்படும் இந்த மாதிரியானது, பிற இன, மற்றும் சமத்துவம் தேடும் சமூகங்களுக்கான மாதிரிகளை வடிவமைப்பதற்கான ஒரு வரைபடமாக அமையும் என்பது எங்கள் நம்பிக்கை.

திட்டத்தின் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்றான  சமூக தேவைகளின் மதிப்பீட்டை நாங்கள் இப்போது கிட்டத்தட்ட முடித்துள்ளோம். சிறார் பாலின துஷ்பிரயோகத்தை பொறுத்தவரை, அதனால் பாதிக்கப்பட்டவர்களான வயது வந்தவர்களை ஆதரிப்பது தொடர்பான தமிழ் சமூகத்தின் தேவைகள் என்ன? இத்தேவைகள் பற்றிய மதிப்பீட்டு செயல்முறையிலிருந்து நாம் அறிந்துகொண்ட விடயங்கள் பற்றி மேலும் அறிய காத்திருங்கள்!

சமூகத்தின் தேவைகள் பற்றிய மதிப்பீட்டின் குறிக்கோள்

இந்த மாதிரியை உருவாக்குவதற்கு முன்னர், சிறார் பாலின துஷ்பிரயோகம் பற்றி தற்போது தமிழ் சமூகம் புரிந்து வைத்திருப்பது என்ன, எதை நம்பிக்கையாக வைத்து நாம் இவர்களைத் தேற்றி ஆதரவளிக்க முனைகின்றோம் என்பதை அறிய வேண்டும். இந்த மதிப்பீட்டின் மூலம் தமிழ் சமூகத்தில் A.N.B.U. வின் சிறார் பாலின துஷ்பிரயோகம் தொடர்பான பின்வரும் குறிக்கோள்களை நிறைவேற்றமுடியும்.

  1. GTA இல் உள்ள தமிழ் சமூகம் தற்போது சிறார் பாலின துஷ்பிரயோகம் பற்றிக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான அறிவு மற்றும் புரிதலை தீர்மானித்தல். இது A.N.B.U. வின் குழு சிகிச்சை மாதிரியின் கல்விக் கூறுகளை அடையாளம் காணவும், சமூகம் சார்ந்த தகவல் மற்றும் CSA பற்றிய புரிதலை உருவாக்கவும் உதவுகிறது.
  2. தமிழ்ச் சமூகம், அவர்களுக்கு ஆதரவு அளித்துச் சிகிச்சையின் மூலம் தேற்றுவதற்குத் தேவையான அறிவு, மற்றும் சேவைகளை அடையாளம் காணுதல். A.N.B.U., இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் தாம் மீண்டு வருவதற்குத் தேவையான கருவிகளைக் கண்டறியக்கூடிய வளங்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பாவனைக்குட்படுத்தவும் உதவ முடியும்.
  3. அவர்கள் தேடும் ஆதரவை அணுகுவதில் தமிழ்ச் சமூகம் எதிர் கொள்ளக்கூடிய சவால்களையும் தடைகளையும் கண்டறிதல். இது தமிழ் மக்களின் தேறுதல் பயணத்தை ஆதரிக்கக்கூடிய தகவல்களை வழங்க A.N.B.U. க்கு உதவும்.

அடுத்த 2 ஆண்டுகளில் A.N.B.U. புலம்பெயர்ந்த தமிழர்களுக்குள் CSAயால் பாதிக்கப்பட்டவர்களுகு மூன்று கட்ட குழு சிகிச்சை மற்றும் தனிப்பட்ட சிகிச்சை அமர்வுகளை (தேவைக்கேற்ப) நடத்தும். அதாவது, குழு சிகிச்சையில் ஈடுபட விரும்பும் நபர்கள் இந்த நேரத்தில் GTA முழுவதும் 3 வெவ்வேறு இடங்களில் பின்வரும் திட்டங்களை அணுகலாம்:

  • இலையுதிர் 2023 ஸ்கார்பரோவில் நேரில்
  • குளிர்/வசந்தம் 2024 (இடம் பின்னர் தீர்மானிக்கப் படும்)
  • இலையுதிர் 2024 (இடம் பின்னர் தீர்மானிக்கப் படும்)

குழு சிகிச்சை முறையே பிரதானமாகக் கையாளப்படும். தனிப்பட்ட சிகிச்சையானது தேவைக்கும், பொருத்தப்பாட்டிற்கும் ஏற்றவாறு ஒழுங்கு செய்யப்படும். கலை சார்ந்த முறைகள் உட்பட கலப்பு முறைகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும்.

எங்களின் தற்போதைய கட்டம் மற்றும் நீங்கள் எவ்வாறு பங்கேற்கலாம் என்பது பற்றிய விவரங்களுக்கு மேற்பக்கத்திற்கு ஸ்க்ரோல் செய்யவும்!

ஸ்வேதா ரங்கநாதன் (அவள்), திட்டம் மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்

ஸ்வேதா ஒரு இலாப நோக்கற்ற மேலாளர், மற்றும் சமூகக் கற்றலுக்கான பங்கேற்பு, கூட்டு இடங்களை உருவாக்குவதற்கான ஆர்வலர் ஆவார். ஸ்வேதா இணையப் பொறியியலில் இளங்கலைப் பட்டமும், சமூக தொழில்முனைவில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். இந்தியாவில் மனநல இயக்கத்தின் முன்னோடியான அப்னி ஷலா அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார். அவர் ஒடுக்கப்பட்டவர்களின் தியேட்டர் ஆர்வலரும், மற்றும் கலை நிர்வாகியும் ஆவார்.

 

அனுஜா போசராஜா (அவள்), பதிவுசெய்யப்பட்ட மனநல சிகிச்சையாளர்

அனுஜா ஒன்டாரியோவின் பதிவுசெய்யப்பட்ட உளவியல் சிகிச்சையாளர்களின் கல்லூரியில் நல்ல நிலையில் உள்ள ஒரு பதிவுசெய்யப்பட்ட மனநல மருத்துவர் ஆவார். A.N.B.U. இன் குழு சிகிச்சை மாதிரியின் ஒரு பகுதியாக, தமிழ் சமூகத்தில் சிறு பருவ பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களுக்கு குழு, மற்றும் சமூகம் மற்றும் தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு சிகிச்சைத் தலையீடுகள் மற்றும் குழு சிகிச்சை மாதிரிகளின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தலுக்கு அவர் உதவுவார். அனுஜா இங்கிலாந்தில் உள்ள லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார், மேலும் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜார்ஜ கல்லூரியில் உளவியல் சிறப்பு திட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒன்டாரியோ மாகாணத்தில் 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார், தற்போது சவுத்லேக் பிராந்திய சுகாதார மையத்தில் குழந்தைகள் மற்றும் இளம்பருவ உணவுக் கோளாறு பிரிவில் குடும்ப சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். அனுஜா தனியார் சிகிச்சையாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர், தனிப்பட்ட சிகிச்சை, குழு சிகிச்சை, ஜோடிகளுக்கான ஆலோசனை மற்றும் குடும்ப சிகிச்சை ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர். போதைக்கு அடிமையாதல், உணவுக் கோளாறுகள், மனச்சோர்வு, பதட்டம், மற்றும் சிறு வயதில் அதிர்ச்சி ஆகியவற்றுடன் போராடுபவர்களுடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக பணியாற்றியவர். அனுஜாவின் பணி, அறிவாற்றல் நடத்தை சிகிச்சையை (Cognitive Behavioural Therapy) அடிப்படையாகக்கொண்டது. ஆயினும், அவர் தனது நடைமுறையில் இயங்கியல் நடத்தை சிகிச்சை (Dialectical Behavioural Therapy), குடும்ப அடிப்படையிலான சிகிச்சை, தீர்வை நோக்கிய கவனம், இணைப்பு அடிப்படையிலான கோட்பாடுகள், அதிர்ச்சி சார்ந்த சிகிச்சை, கலை சிகிச்சை மற்றும் நினைவாற்றல் ஆகிய சேவைகளை வள்ங்குகின்றார்.

 

அருமிதா சசிஹரன் (அவள்), கிராஃபிக் டிசைனர்

அருமிதா நியாயமான காரணங்களுக்காகச் செயற்படும் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதையும், வடிவமைப்பின் மூலம் தகவலுக்கு உயிரூட்டுவதையும் மிகவும் விரும்புபவர். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த அருமிதா, கலைத் துறையில் தொடர்ந்து ஈடுபட ஆர்வமாக உள்ளார். ஓய்வு நேரங்களில் வண்ணம் தீட்டவும், தோட்டம் செய்யவும், சமைக்கவும் விரும்புபவர். அருமிதா தமிழ் சமூகத்தில் கலைக்கல்வி மற்றும் தன்னார்வலர்களின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.

 

மணிவிழி கனகசபாபதி (அவள்) திட்ட மதிப்பீட்டாளர்

மணிவிழி, ஒரு கொள்கை மற்றும் திட்ட மேம்பாட்டு நிபுணராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக மூலோபாய கொள்கை மேம்பாடு, இலாப நோக்கமற்ற திட்ட மேலாண்மை, சமூக நீதி மற்றும், சமூக ஆர்வலர் பணிகளில் செயற்படுகின்றார். ஒதுக்கப்பட்ட மற்றும் ஆபத்தில் இருக்கும் சமூகங்களுடன் பணிபுரியும் தனது மாறுபட்ட அனுபவத்தைப் பயன்படுத்தி, வளக் கட்டுப்பாடுகள் உள்ள சமூகங்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பொருத்தப்பாடுடைய தீர்வுகளை உருவாக்கியுள்ளார்.

அவர்களின் அமைப்பின் குறிக்கோள்களை அடைய உதவிக்கரம் கொடுத்துள்ளார். நிதியுதவிநிறுவனத்தின் சட்டத் தேவைகளை பூர்த்தி செய்து, அவற்றை மிஞ்சும் உயர்தர திட்டங்களை வழங்குவதில் பெயர் பெற்ற இவர், சிறு இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு அவர்களின் திட்ட ஆணை மற்றும் குறிக்கோள் போன்றவற்றை அடைய மிகவும் உதவியாய் இருந்துள்ளார். விரிவாக்கத்திற்கான புதிய வழிகளை அடையாளம் காண வணிகங்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு வளர்ச்சி மற்றும் கூட்டாண்மை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சீரமைப்புகளை அவர் அடையாளம் காட்டுகிறார். மணிவிழி, 2003 இல் யோர்க் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் ஆய்வுகளில் (Honours) இளங்கலைப் பட்டம் பெற்றார். மற்றும் 2006 இல் கார்ல்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், 2013 இல் யோர்க் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை, நிர்வாகம் மற்றும் சட்டத்தின் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆபத்தில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இன, மற்றும், ஓரங்கட்டப்பட்ட நபர்களுக்கு சமூக ஆதரவுக்கான உதவியை வழங்குதலே இவரது ஆராய்ச்சியின் நோக்கமாகும்.

 

அனுஷ்யா கார்த்திகேசு (அவள்), மொழிபெயர்

அனுஷ்யா, கலை, கலாசாரம், மொழிகள் மற்றும் சமூகம் போன்ற விடயங்களில் ஈடுபாடுள்ளவர். சிறிலங்காவின் நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரியாகப் பணி செய்தவர்.

முக்கிய கூட்டாண்மைகள்

The Gatehouse

York University – The Centre for Sexual Response Violence, Support and Education

தொடர்பில் இருங்கள்

A.N.B.U. வின் குழு சிகிச்சை முன்னொடி திட்டம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? எங்கள் திட்டம் மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா ரங்கநாதனை தொடர்பு கொள்ளவும்.

Swetha Ranganathan:
wageproject@anbu.ca | 289-980-3022